
ஓங்கி உயர்ந்த மரங்களின் பேயாட்டம் பெருங்காற்றில்,
அடர் கிளை உரசலில் பழுத்த இலையொன்று
ஆயுள் முடிந்ததாய் பரவசித்து, விடுபட்டுத் தலை சுற்றி
மண் நோக்கி விரைந்தது......
சுற்றிச் சுழன்று மண்ணுடன் மக்க வீழ்ந்த இடம்
மாவீரன் விதைக்கப் பட்ட நாற்று மேடை,
பேரானந்தத்துடன் – பிறவிப்
பய னென இறுமாந்தது.....
மந்தகாசமான மாலை வெயில், கல்லறை அருகில்
சருகாகிச் சாக கடைசி ஆசை பூண்டது - அதன் மோனத்
தவத்தைக் குலைத்தது சன்னமான ஒலி,
பலவீன விம்மலுடன் கூடிய அழுகுரல்..
மிக மிக அருகில்
புரியவில்லை அதற்கு......,
மயான அமைதி தொடர்ந்தது மீண்டும்....
உருண்டது நேரம், பகலை விழுங்கியது இரவு,
கல்லறைகளின் அழகை நிலவில் இரசிக்க ஆரம்பிக்கையில்
திடுமெனக் கிளம்பியவோர் அவல ஓலத்தில் திடுக்குற்றது இலை,
இப்போதும் அதே விம்மலும், அழுகையும்
முன்னரிலும் பல மடங்காய், மிகப் பயங்கரமாய், திக்கெட்டிலுமிருந்து.....
தெளிவாக செவியில் அறைந்தது ஒப்பாரிக் குரல்,
ஏக காலத்தில் கல்லறைகளின் கதறல்கள் – “எம் மக்கள், பசியிலும் குளிரிலும், நாற்றத்திலும்
முட்கம்பி வேலிகள் பின்னால்
வதையுறும் அவலம் ஏன் ?”….என
வான் பிளந்தது கதறல், அழுகுரல் ஓங்கியது
எங்கோ பொழிவதற்காய் சென்று கொண்டிருந்த கருமுகில்
கூட்டங்கள் திசை மாறி
அவற்றுடன் முகாரி பாடின....
மழை நீரில் சிக்குண்ட இலை
இடம்மறியபடி இறுதியாக இரந்து
மன்றாடத் தொடங்கியது
படைத்தவனிடம்......
"கல்லறையிலாவது இவர்கள்
அமைதியாகத் துயில
விரைவில் ஏதேனும் வழி செய் ”