
என்னை எனக்கு உணர்த்தி
உன்னை என்னில் கரைத்துப்
பின் காலி செய்த இதய அறைகள்
வெறிச்சோடிப் போனாலும்
கனம் பல மடங்கானதாய் உயிர் கதற,
இணையைப் பிரிந்த குயிலொன்று
எனக்குமாய்ச் சேர்த்து முடிவற்ற
காற்றில் தன் சோகம் கரைத்து,
கணப் பொழுதில் மாறிவிட்ட
காதலுக்கு கறுப்பு வர்ணம் தீட்டியது.
கனவில் உனைக் காண
உறங்கும் நாட்கள் மாறி,
தினம் மகிழ்ந்து மலர்வதும்
பின் கருகிச் சருகாவதுமாய்
மறந்தும் மூடாத விழிகளுடன்
நெக்குருகி நானிருக்க,
ஒன்றாய் நாமிருந்த
தித்திக்கும் நினைவுப் பொதி சுமந்து
மீண்டும் எமைத் தாங்கும் வரம் வேண்டி
ஒற்றை இருக்கையும்
என்னுடன் காத்திருக்கிறது
கடுகி வருவாயா,
காலன் என் கை பிடிக்கு முன்னே... ..???
0 comments:
Post a Comment