புள்ளினமே, எறும்புகளே
வாசலிலே கோலமில்லை
உம் பசியாற்றவிங்கு.....
என் மக்கள் வீதியிலே,
பல மனைகளில்
முற்றமென்ற ஒன்றில்லை……!
பழங்கோதும் அணில் பிள்ளாய்,
வௌவாலே, கிளிகளே
வீட்டினுள் பொன்சாயில்
உமக்கான கனிகளில்லை,
குந்தியிருக்க நிலமற்ற
என் மக்கள் மரமெங்கே வளர்ப்பதிங்கு….!
அன்னமிட வழியில்லைக் காக்கையரே,
பலருக்கு அவசரகதி உணவு
சிலருக்கு அரிசியில்
அவர் பெயரே இல்லை,
பட்டினியால் வாடுகிறார்…!
வாசல் வரும் ஆவினமே
களனித் தண்ணி கேளாதீர்.!
என் மக்கள் வரிசையிலே,
கோப்பைத் தேனீருக்காய்த் தவமிருக்க
பலருக்கு நேரமில்லை,
ஓடுகிறோம் சக்கரமாய்....!
தேன் தேடும் பூச்சிகளே
வந்திங்கு ஏமாந்து போகாதீர்,
புறாக் கூட்டில் வாழும் மக்கள்
பூச் செடிகள் வளர்ப்பதெங்கே.!?
பூப் போன்ற பிஞ்சுகளைக்
காப்பாற்ற வழியற்ற
என் மக்கள் பூச் செடியா வளர்ப்பரிங்கே..!?
பணம் தேடும் பயணத்தில்,
உம்மை ரசித்திடவும்,
உம் பசி போக்கிடவும்
இங்கெதற்கும் நேரமில்லை..!!!
இழப்புக்கள் நினைத்தழும்
என் மக்களுக்கோ
எதிர்காலம் பெருமிருட்டாய்…..…!!!
குறுகிப் போன மனங்கள் போல்
நீங்களும் அரிதாகிப் போவீரோ,
பாசமற்ற சொந்தங்கள் போல்
நீங்களும் ஒதுக்கி வெறுப்பீரோ..?
நாம் வேண்டுமென்று செய்யவில்லை
எம் நிலமை புரிந்து கொள்வீர்
தயை கூர்ந்து மன்னிப்பீர்…!!!
Monday, June 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//குறுகிப் போன மனங்கள் போல்
நீங்களும் அரிதாகிப் போவீரோ,
பாசமற்ற சொந்தங்கள் போல்
நீங்களும் ஒதுக்கி வெறுப்பீரோ..?
நாம் வேண்டுமென்று செய்யவில்லை
எம் நிலமை புரிந்து கொள்வீர்
தயை கூர்ந்து மன்னிப்பீர்…//
மனதை கசக்கிப் பிழிகிறது மஞ்சு. யாரையுமே நோகாமல் தன் வலியை சொல்லும் நடை மிக நேர்த்தி.
நிறைய எழுதுங்கள். உங்களின் கவிதைகள் உள்புகுந்து, ஒரு ஏக்க குரலை எழுப்பி, எதையோ சிந்திக்கும் பாரத்தை சுமக்க வைக்கிறது..
காலம் நம் மக்களுக்கு தீர்ப்பெழுதும் என்று எதிர்பார்த்தே, 'இழந்த உயிர்களுக்கு எண்ணிலடங்க கண்ணீர் மட்டும் சமர்ப்பணமாகும் இடையில்' நானென்ன சொல்வேன்..???
வருந்தி வேறு வழி தேடும் கண்ணினாய் - தங்களின் கவிதையை மட்டும் வாழ்த்திப் போவேன்!!
பாராட்டுக்களோடு..
வித்யாசாகர்
குவைத்
உங்கள் பாராட்டு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது வித்யாசாகர் அவரகளே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்..
அழியா அன்புடன்
மஞ்சு.
Post a Comment