
வறண்ட பூமிக்கு வந்தது பூ மழை ,
இறந்து கொண்டிருந்த கலங்கள்
உயிர் கொண்டன அந்நாளில்,
சட்டென்று துளிர் விட்டது மனசு..!
அன்பெனும் நீர் வார்ப்பில்
சோலையும் செழித்திட,
படபடத்த பட்டாம் பூச்சிகளின்
சிறகசைப்பில் லயித்திருந்த
கணங்களிலே பசி தூக்கம் மறந்தது,
பெரு மாயமன்றோ நிகழ்ந்தது....!
நரம்புகளிலும் நாளங்களிலும்
அறுத்தெறிய முடியாத
கொடியாகப் பற்றிப் படர்ந்து
உன் இருப்பை உறுதி செய்தாய்.
மழைக்காலம் மாறிவிட,
வசந்தகாலம் வந்துதிக்க
சோலையெங்கும் வண்ணப் பூக்கள்,
கொடிப் பூக்களின் வாசம்,
குருதியிலும் சுவாசத்திலும்
விரவி நிற்க, புதிதாய் பிறந்ததாய்
இருவருமே கண்டு கொண்டோம்
உலகமே அழகாக,
ரசித்திருந்தோம், சுற்றம் மறந்தோம்.
கோடை வருமென
கிஞ்சித்தும் எண்ணவில்லை...!
கோடையிடையாய்
நீயே வந்தாய்....!
எனக்குள், நீ வளர்த்த காதல் அழிய,
உன்னைப் பெற்றவர்கள் அழியாமல் தடுக்க
இனிப்புப் பூச்சிட்ட கச்சல் மருந்தை
வருத்தியெனை விழுங்க வைத்தாய்...!
இருள்கவிந்த வதனம் தாங்கி,
கை பிசைந்து, கனியிதழ் துடிக்க
வார்த்தை தேடி நீ நிற்க
மனசுக்குள்ளே தொடங்கிய
கோடை மழையால்,
கலங்கள் யாவும் சில்லாய் சிதறிட,
கொடியின் வேரை
இழுத்துப் போட்ட
வேதனையில் நீ துடிக்க...,
உனை வதைக்க மனமின்றி,
தொடர் கோடையை ஏற்றுக் கொண்டேன்.
மீண்டும் காலங்கள் மாறக் கூடும்,
கருகி விட்ட சோலையது
துளிர்க்குமென்பது நிச்சயமில்லை....!!!
0 comments:
Post a Comment