
உயிரின் துடிப்பு மிக வேகமாகிட
நேரமுள் முன்னரிலும்
மெல்ல நகருவதாய்
இன்ப வேதனையிலகப்பட்ட
மனது குறை கூறும்.
இதயத் துடிப்பை இது நாள்வரை
கண்டு கொள்ளாதிருந்தேன்;
உன் இதயம் எனக்காய்த்
துடிப்பதாக நீ சொன்ன நாளிலிருந்து,
எனதுயிரும் சேர்ந்து துடிப்பதை
சொல்வதற்காய்த் தவிக்கிறேன்.
பிரிவு வல்லிய நோவைத் தந்தாலும்
நம் காதலைப்
பலமடங்கு கூட்டியத்தைச் சொல்ல
என் கணனிப் பலகையில் எழுத்துக்களைத்
தேடிக் களைக்கிறேன்..!!!
சிறு புன்னகையாலும்
ஓர விழிப் பார்வையாலும்
விழுங்கப் போவது என்னையும்
உனக்காகத் தேடிப் பொறுக்கிய
வார்த்தைகளையும் என்பது
சர்வ நிச்சயமாகத் தெரிந்தும்,
நாட்காட்டியை இரவிலேயே கிழித்து விட்டு
ஒத்திகை பார்க்கிறேன் புதுமையான தவிப்புடன்.
2 comments:
//நாட்காட்டியை இரவிலேயே கிழித்து விட்டு
ஒத்திகை பார்க்கிறேன் புதுமையான தவிப்புடன். //
இந்த வரிகளை வாசித்து முடித்தவுடன், வாசிப்பவரே கவிதை எழுதியதைப் போன்ற ஒரு அனுபவத்தை தந்தது.
ஒரு சொல்லிலிருந்து உணர்வுக்கான அகமனதின் தூரம் உன்னிடம் குறைந்து கொண்டிருக்கிறது..ஒரு கவிதையை எழுத வேண்டுமென்கிற தீவிரம் உள்ளுணர்வை மிக அழுத்தமாக வெளீப்படுத்த வேண்டும் என்பதிலும் இருக்கிறது....இன்னும் நிறைய எழுதுக்கா...ஆனால் உன் அகமனதின் குரலோடு நின்று விடாதே....
Post a Comment