கனத்த போர்வைக்குள் சோம்பலுடன்
பூனை போல் உடல் சுருட்டி கதகதப்பை
சுகித்திருந்தேன், பேய் இரைச்சலுடன்
இரண்டாவது தினமுமாய் அடை மழை,
வெள்ளக் காடான வீதி வழி
போகத் தேவையில்லை,
அடுக்களையில் அடுக்கடுக்காக எல்லாம்,
மழை தீரும் வரை அவை தீரா...!
சாளரத்தின் வழியே என் பெயர் சொல்லி
அழைப்பது யார்....?
மெல்ல அடியெடுத்து அருகே சென்றேன்.......
மழையின் காதலியே,
மனம் விட்டுப் பேசலாமா....?
ஓ.... என் இன் மழையே, வா.... வா...!!!
எனக்கு உனைப் பிடிக்கும்,
என்றாலும் இன்றுடன் இரண்டு நாள்
விட்டுப் போக மனமில்லையோ ?
தோழியே நான் என் செய்வேன்,
தூரத்தில் ஓரிடத்தில் பொழியப் பணிக்கப் பட்டேன்
போகு முன்னே இடி, மின்னலை அனுப்பினேன்
ஏழை விவசாயி வாய்விட்டுக் கதறினான்
கதிரறுக்கும் சமயத்தில் ஏன் வந்தாய் இங்கென..!
காற்றின் துணைகொண்டு
ஓடினேன் மற்றோரிடம்
மரங்களே வீடுகளாய், வானமே கூரையாய்
பல ஆயிரம் மக்கள் நிர்க்கதியாய், மனம் வெதும்பி
சிறு துளியாய் அவர்கள் மீது
கண்ணீர் சிந்தியே நகர்ந்தேன் அங்கிருந்து....!
இனியும் தாங்காது சூலின் பாரம் என
இறக்கிவிட எத்தனிக்க
களிப்புடன் பொழுது கழிக்க
மைதானமெங்கும் திரள் மக்கள்
போ மழையேயெனப் பெருங் கூப்பாடு,
தாங்கவில்லை அவர் கூச்சல்
ஓடோடி வந்தேனிங்கு....!
பல நாள் பாரம் இறக்கிவைக்க
வேண்டுமல்லோ,
ஓட்டைக் கூரை வீடுகளில்,
பாத்திரங்கள் மழை நீர் சேர்க்கும்,
அடுத்த வேளை சமையலுக்கு
விறகெல்லாம் ஈரமாய்,
உலர் ஆடை இருக்காது மாற்றிட
பல பிஞ்சுக் குழந்தைகளுக்கு,
தெருவோரப் பிச்சைக்காரனுக்கோ
ஒதுங்க இடம் தெரியாது,
அன்றாடங் காய்ச்சிகளுக்கு
கூலியும் இருக்காது,
சிறகு தூக்கிப் பறக்க
பட்டாம் பூச்சிகள் தடுமாறும்,
குஞ்சுகளுக்கு உணவு தேட
பறவைகளும் துணியாது,
சுமூக நிலை சீர்கெடும்,
இருந்தாலும் கவலையில்லை....!
என் தப்பு இதிலில்லை,
வராவிட்டால் பெருங் குற்றம்
ஆகையினால் வந்துவிட்டேன்
பொறுத்தருள வேண்டுமெனை,
பல நாள் சுமையிது
கொட்டித் தீர்த்துப் போவேன் நான்...!
ஒழுகாத மாடி வீட்டில்
ஒய்யாரமாய் சன்னல் வழி
சூடான தேனீருடன்,
சிற்றுண்டி கையிலேந்தி
எனை ரசிக்கும் உன்னைப் பார்க்க
வந்ததிலே பேருவகை...!
என்னை வேண்டிடும் இடம்
சென்று பொழியும் வரை
சுமந்து செல்லக் காற்றுக்கோ
முடியவில்லை, எனக்காய்
ஏங்கும் மக்கள் பல்லாயிரம்
பேரிருக்க, தலை சுற்றி
தறி கெட்டுத் திசை மாறி
இங்கேயே தங்கி விட்டேன்,
என்னால் நேர்ந்த அழிவுக்கு
யாரிடம் கேட்பேன் மன்னிப்பு,
பிராயச்சித்தமாய் இன்னும்
ஓர் தினம் அழுதுவிட்டுப் போகிறேன்....!
அவரவர் தலைவிதிக்கு நான் என்ன
செய்வது, உன் தோழி நான்
உன்னைப் போல் எனக்கும்
மற்றவர் பற்றிக் கவலை கொள்ள
நேரமே இல்லை.....!!!
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
"மற்றவர் பற்றிக் கவலை கொள்ள
நேரமே இல்லை....."
ஓடிக்கொண்டிருக்கும் உலகம்,
யாருக்கும் நேரம் இருப்பதில்லை...
அன்றாட வாழ்க்கையில்
ஆயிரம் கவலைகள்.
நின்று யோசிக்கவும் நேரமும் இல்லை
நேசித்துப் பார்க்கவும் யாரும் இல்லை...
ஓட்டம் நிற்கும்வரை ஓடுவோம்...
// .ஒழுகாத மாடி வீட்டில்
ஒய்யாரமாய் சன்னல் வழி
சூடான தேனீருடன்,
சிற்றுண்டி கையிலேந்தி
எனை ரசிக்கும் உன்னைப் பார்க்க
வந்ததிலே பேருவகை...!//
நான் மிகவும் ரசித்த வரிகள்....இப்போ தான் முதன் முதலா உங்கள் வலைத்தளம் வருகிறேன்,ஆச்சரியாமாய் இருக்கிறது.....எல்லா கவிதையும் படித்துவிட்டு வருகிறேன்.
@ சிவா : வரவுக்கும் உங்கள் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்...!
அழியா அன்புடன்
மஞ்சு
@ ஜெரி ஈசானந்தன் : உங்கள் வருகை பேருவகை அளிக்கிறது தோழா.., உங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்கு உரமூட்டட்டும்... நன்றியும் வணக்கங்களும்.
அழியா அன்புடன்
மஞ்சு
கொஞ்சம் வித்தியாசமான
சிந்தனையில் உருவான கவிதை
அருமையாக இருக்கிறது .. மஞ்சு ..
அனைவரது செயல்களுக்கும்
ஒரு காரணம் இருக்கும்
அவர்களுக்குள் ..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்களோடு
விஷ்ணு
பிரியமுடன்
விஷ்ணு : வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழா...!
அழியா அன்புடன்
மஞ்சு
Post a Comment